50 வயதுக்கு பின் ஆரோக்கியத்தை எப்படி பாதுகாப்பது? SCI கோயம்புத்தூர் லீஜியன் கூட்டத்தில் மருத்துவர் முக்கிய ஆலோசனைகள்
SCI கோயம்புத்தூர் லீஜியன் ஜூலை 2026 மாதாந்திர கூட்டத்தில், 50 வயதுக்கு பின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான உணவு, தண்ணீர் அருந்துதல், உடற்பயிற்சி மற்றும் முதியோர் பராமரிப்பு குறித்த முக்கிய ஆலோசனைகளை டாக்டர் ஏ.கே. செந்தில் குமார் பகிர்ந்தார்.
சீனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (SCI) கோயம்புத்தூர் லீஜியன் அமைப்பின் ஜூலை 2026 மாதாந்திர கூட்டம் ஜூலை 27, 2026 அன்று கோவை சிவானந்தா காலனியில் உள்ள கர்நாடகா அசோசியேஷன் மண்டபத்தில் மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் டாக்டர் ஏ.கே. செந்தில் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, "50 வயதிற்கு பின் ஆரோக்கிய பராமரிப்பு" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 50 வயதிற்குப் பிறகு உடல் நலத்தைப் பேணுவதற்கு வாழ்க்கை முறை மாற்றங்கள் மிகவும் அவசியம் என்பதை அவர் பல்வேறு புள்ளிவிவரங்கள் மற்றும் விளக்கப்படங்கள் மூலம் எடுத்துரைத்தார்.
50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியமாக வாழ மூன்று முக்கிய வழிமுறைகளை அவர் வலியுறுத்தினார். அவை "EAT SMART", "HYDRATE FAST", "MOVING ART" என்பவையாகும்.
"EAT SMART" குறித்து பேசும்போது, அதிக புரதச்சத்து, குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் சமநிலையான நார்ச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். உணவை சரியான இடைவெளியில் சாப்பிடுவதின் அவசியத்தையும் விளக்கி, "EAT YOUR WATER – CHEW YOUR FOOD" என்ற கருத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உடலில் போதுமான நீர்ச்சத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம் என்பதால், தினமும் போதிய அளவு தண்ணீர் அருந்தும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான கணக்கை வைத்திருப்பதும் நல்லது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பழங்கள் மற்றும் இயற்கையான உடல் நச்சு நீக்கும் உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுமாறும் பரிந்துரைத்தார்.
"Moving Art" என்ற கருத்தின் கீழ், நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, யோகா மற்றும் பிற உடற்பயிற்சிகளை தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். SCI உறுப்பினர்களின் நடைப்பயிற்சி, ஓட்டம், யோகா மற்றும் விளையாட்டு செயல்பாடுகளை கண்காணிக்க அமைப்புக்கென தனிப்பட்ட செயலி (App) ஒன்றை உருவாக்கினால், உறுப்பினர்களின் ஆரோக்கிய ஈடுபாட்டை மேலும் அதிகரிக்க முடியும் என்றும் ஆலோசனை வழங்கினார்.
மேலும், 50 வயதிற்கு பிந்தைய தனிப்பட்ட வாழ்க்கை மேலாண்மை மற்றும் முதியோர் பராமரிப்பு (Geriatric Care) தொடர்பான பல பயனுள்ள ஆலோசனைகளையும் பகிர்ந்தார். அவரது உரை SCI கோயம்புத்தூர் லீஜியன் உறுப்பினர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு SCI கோயம்புத்தூர் லீஜியன் தலைவர் சினியர் அசோக் பட் தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார். அமைப்பின் செயலாளர் சினியர் பரேஷ் தேசாய் நன்றியுரை வழங்கியதுடன், அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் பகிர்ந்துகொண்டார்.
மொத்தம் 20 உறுப்பினர்களில் 14 பேர் இந்த மாதாந்திர கூட்டத்தில் பங்கேற்று, ஆரோக்கியம் மற்றும் முதியோர் பராமரிப்பு தொடர்பான பயனுள்ள தகவல்களை பெற்றனர்.
Prasanth Subramani