மீண்டும் நிராகரிக்கப்பட்ட கோவை மெட்ரோ திட்டம்! 2வது முறையாக மறுத்த மத்திய அரசு
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மக்கள் தொகை தகுதி அளவுகோலை காரணம் காட்டி மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. நவம்பரில் நிராகரிக்கப்பட்ட பிறகு மே மாதத்தில் மீண்டும் அனுப்பப்பட்ட முன்மொழிவும் தற்போது 2வது முறையாக ஏற்கப்படவில்லை.
கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு மீண்டும் ஒப்புதல் வழங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் தொகை அடிப்படையிலான தகுதி அளவுகோலை சுட்டிக்காட்டியே இந்தத் திட்டங்கள் 2வது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் கடந்த நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு அரசு அனுப்பிய மெட்ரோ ரயில் திட்ட முன்மொழிவு மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் திட்டத்தில் தேவையான விவரங்களை திருத்தி, மே மாதத்தில் மீண்டும் அனுப்பியிருந்தது.
ஆனால், மறுபரிசீலனைக்காக அனுப்பப்பட்ட அந்த முன்மொழிவும் தற்போது மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை மற்றும் மதுரை நகரங்கள் மெட்ரோ ரயில் திட்டத்திற்குத் தேவையான மக்கள் தொகை தகுதி அளவை பூர்த்தி செய்யவில்லை என்பதே இதற்கான முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது.
கோவை மற்றும் மதுரை போன்ற வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும் மெட்ரோ ரயில் திட்டம் அவசியம் என நீண்டகாலமாக கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக திட்டம் நிராகரிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை மீண்டும் திருத்தி சமர்ப்பிக்குமா அல்லது மாற்று பொதுப் போக்குவரத்து திட்டங்களை முன்னெடுக்குமா என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Prasanth Subramani