சஞ்சு சாம்சன் சூப்பர் ஷோ: டெல்லியை வீழ்த்திய சென்னை அணி
ஐபிஎல் 2026 போட்டியில் சென்னை அணி, டெல்லியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சஞ்சு சாம்சன் 87 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிகாட்டினார்.
ஐபிஎல் 2026 தொடரின் 48-ஆவது போட்டியில், சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களான பதும் நிசங்கா மற்றும் கே.எல்.ராகுல் நீண்ட நேரம் நிலைக்க முடியாமல் வெளியேறினர்.
கருண் நாயர், நிதீஷ் ராணா மற்றும் கேப்டன் அக்ஸர் படேல் ஆகியோரும் பெரிய பங்களிப்பு வழங்காததால் டெல்லி அணி தடுமாறியது.
இந்நிலையில், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் சமீர் ரிஸ்வி இணைந்து 65 ரன்கள் கூட்டணி அமைத்து அணியை மீட்டனர். ஸ்டப்ஸ் 38 ரன்களும், சமீர் ரிஸ்வி 40 ரன்களும் எடுத்தனர்.
சென்னை அணியின் பந்துவீச்சில் நூர் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அகீல் ஹுசைன், முகேஷ் சௌதரி, குர்ஜப்னீத் சிங் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
பின்னர் 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி, தொடக்கத்தில் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை இழந்தாலும் அதிரடியாக விளையாடியது.
சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். உர்வில் படேல் 17 ரன்கள் எடுத்த நிலையில், கார்த்திக் சர்மா சாம்சனுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இந்த ஜோடி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. சஞ்சு சாம்சன் 87 ரன்களும், கார்த்திக் சர்மா 41 ரன்களும் சேர்த்தனர்.
சென்னை அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Prasanth Subramani