உர்வில் படேல் அதிரடி: லக்னோவை வீழ்த்தி 5வது இடத்துக்கு முன்னேறிய சிஎஸ்கே
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது.
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.
லக்னோ அணியின் தொடக்க வீரர் ஜோஷ் இங்லிஷ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொண்ட அவர், வெறும் 33 பந்துகளில் 85 ரன்கள் விளாசினார். அவரது இன்னிங்ஸில் 10 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் இடம்பெற்றன.
மற்றொரு முனையில் ஷபாஸ் அகமது நிதானமாக விளையாடி 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 3 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.
அக்ஷத் ரகுவன்ஷி 18 ரன்கள், ஹிம்மத் சிங் 17 ரன்கள், ரிஷப் பந்த் 15 ரன்கள் மற்றும் மிட்செல் மார்ஷ் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
சென்னை அணியின் பந்துவீச்சில் ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளும், நூர் அகமது ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
204 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு உர்வில் படேல் அதிரடி தொடக்கம் கொடுத்தார்.
அதிரடியாக விளையாடிய அவர் வெறும் 23 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார். அவரது இன்னிங்ஸில் 2 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் இடம்பெற்றன.
அவருக்கு துணையாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 42 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து சஞ்சு சாம்சன் 28 ரன்கள், கார்த்திக் சர்மா 20 ரன்கள் எடுத்தனர்.
இறுதியில் பிரசாந்த் வீர் 18 ரன்களுடனும், ஷிவம் துபே 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
Prasanth Subramani