ஜூன் 26 முதல் தமிழ்நாட்டில் கனமழை.. 10 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் ஜூன் 26 முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஜூன் 26 முதல் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் மழை தீவிரமடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜூன் 23) தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எந்த மாவட்டங்களில் கனமழை?
ஜூன் 26:
நீலகிரி, தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 27:
திருநெல்வேலி மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
ஜூன் 28:
திருநெல்வேலி மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஜூன் 29:
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை எப்படி இருக்கும்?
ஜூன் 23 முதல் 27 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னையில் ஜூன் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்ட மக்கள், குறிப்பாக மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள், கனமழை மற்றும் பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கைகளை கவனமாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Prasanth Subramani