சிறுவாணி அணை மேம்பாட்டுக்கு ரூ.82 கோடி.. தமிழக-கேரளா இணைந்து முக்கிய முடிவு!

கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் பராமரிப்பு மற்றும் கசிவை சரிசெய்ய தமிழக-கேரளா அரசுகள் இணைந்து ரூ.82 கோடி மதிப்பிலான பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளன.

சிறுவாணி அணை மேம்பாட்டுக்கு ரூ.82 கோடி.. தமிழக-கேரளா இணைந்து முக்கிய முடிவு!

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக தமிழக மற்றும் கேரள அரசுகள் இணைந்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளன. அணையில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவு பிரச்சினையை சரிசெய்து, கோவைக்கு சீரான குடிநீர் வழங்கும் நோக்கில் ரூ.82 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவாணி அணையின் பராமரிப்பு செலவுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் பாதுகாப்பு காரணங்களுக்காக 45 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. இரு மாநிலங்களுக்கிடையேயான ஒப்பந்தத்தின்படி தினசரி 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது அணையில் 10 அடிக்கும் குறைவாகவே நீர் இருப்பதால், குடிநீர் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மழைப்பொழிவு குறைவு மற்றும் அணையின் மதகு பகுதியில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவு காரணமாக தினசரி 10 எம்.எல்.டி. தண்ணீர் வீணாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஜனவரி முதல் பருவமழை தொடங்கும் காலம் வரை தினசரி சுமார் 30 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே கோவைக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிறுவாணி அணையின் நிலை மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து தமிழகம் மற்றும் கேரள அரசுகளின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் பாலக்காட்டில் நடைபெற்றது. இதில் தமிழக குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அணைக்கு செல்லும் சாலைகள், கட்டிடங்கள், வாகன வசதிகள் மற்றும் அணையின் பாதுகாப்பு தொடர்பான பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், அணையில் ஏற்பட்டுள்ள கசிவை சரிசெய்ய அதிக அழுத்தத்துடன் சிமென்ட் கலவை செலுத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தேசிய அணைகள் பாதுகாப்பு குழு பரிந்துரைத்துள்ளது.

சிறுவாணி அணை பராமரிப்புக்காக 2022 முதல் 2026 வரை தமிழக அரசு கேரள அரசுக்கு ரூ.26 கோடி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அணை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.64 கோடி செலவிட இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. அதேசமயம் நீர்க்கசிவை நிரந்தரமாக சரிசெய்ய கூடுதலாக ரூ.18 கோடி ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களுக்கு இரு மாநில அதிகாரிகளும் ஒப்புதல் அளித்து அறிக்கையில் கையெழுத்திட்டு தமிழக அரசின் இறுதி ஒப்புதலுக்கு அனுப்ப உள்ளனர். அடுத்த ஆண்டு கோடை காலத்தில் பணிகளை தொடங்கி விரைவாக நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், கோவை மாநகருக்கு மார்ச் மாதம் வரை சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சிறுவாணி அணையின் பலப்படுத்தும் பணிகள் கோவை மக்களின் நீண்டகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.