கோவை எஸ்.ஆர்.வி. பள்ளியில் உலக இன்டராக்ட் தினம் கொண்டாட்டம்! சர்வதேச புரிதல், தலைமைத்துவப் பயிற்சியில் மாணவர்கள் பங்கேற்பு
கோவை குனியமுத்தூரில் உள்ள சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலயா பள்ளியில் உலக இன்டராக்ட் தினம் 2026 கொண்டாடப்பட்டது. பிரேசில் மாணவருடனான சர்வதேசக் கலந்துரையாடல் மற்றும் தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கோவை எஸ்.ஆர்.வி. பள்ளியில் உலக இன்டராக்ட் தினம் கொண்டாட்டம்! சர்வதேச புரிதல், தலைமைத்துவப் பயிற்சியில் மாணவர்கள் பங்கேற்பு
கோவை குனியமுத்தூரில் உள்ள சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் (SRV School) இன்டராக்ட் கிளப் சார்பில் உலக இன்டராக்ட் தினம் 2026 நவம்பர் 5ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சர்வதேசப் புரிதலை வளர்க்கும் கலந்துரையாடலும், மாணவர்களின் தலைமைத்துவத் திறனை மேம்படுத்தும் பயிற்சியும் இடம்பெற்றன. 'இன்டராக்ட் ஸ்கொயர்டு' (Interact Squared) என்ற தலைப்பில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த ரோட்டரி இளைஞர் மாணவர் பரிமாற்றத் திட்ட (YSE) பங்கேற்பாளர் ஜோவோ பெட்ரோ டா சில்வா புஹ்லர் கலந்து கொண்டார். தனது இந்தியப் பயணம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், உலக இன்டராக்ட் தின வாழ்த்துகளையும் தெரிவித்தார். ஹெச்ஐசிஇடி ரோட்டராக்ட் கிளப்பைச் சேர்ந்த ரோட்டராக்டர் மஹனூர் கான் கலந்துரையாடலை வழிநடத்தினார். இதில் மாணவர்கள் பிரேசில், இந்திய அனுபவங்கள் மற்றும் கோவையில் அவருக்குப் பிடித்தமான விஷயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பினர். மாணவர்கள் போர்ச்சுகீசிய மொழியிலும், ஜோவோ தமிழிலும் உரையாடியது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது. மேலும், அவர் போர்ச்சுகீசியப் பாடல் ஒன்றைப் பாடி மாணவர்களை மகிழ்வித்தார்.
தொடர்ந்து, 'தி பி இன் லீடர்ஷிப்' (The P in Leadership) என்ற தலைப்பில் தலைமைத்துவப் பயிற்சி நடைபெற்றது. ரோட்டராக்டர் ஃபயாஸ் கான் இந்த நிகழ்ச்சியை வழிநடத்தினார். 'P' என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் சொற்களை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டு மற்றும் சிந்தனைத் திறனைத் தூண்டும் செயல்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். அன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடிய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் உதாரணத்தையும் எடுத்துரைத்து, தலைமைத்துவத்தின் ஐந்து முக்கிய அம்சங்களான நோக்கம் (Purpose), ஆர்வம் (Passion), மக்கள் (People), செயல்திறன் (Performance), விடாமுயற்சி (Persistence) ஆகியவற்றை விளக்கினார். இந்தப் பயிற்சி மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. உலக இன்டராக்ட் தினத்தின் 64ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில், இன்டராக்ட் கிளப் நிர்வாகிகள், ஆசிரியர் ஆலோசகர், ரோட்டரி ஆலோசகர் மற்றும் YSE மாணவர் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், எட்டு மாணவர்கள் ஒரே நேரத்தில் ஜோவோவுடன் விளையாடிய 8-க்கு-1 விரைவு சதுரங்கப் போட்டியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.வி. பள்ளி இன்டராக்ட் கிளப் தலைவர் மாணவி சான்விகா வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் மாணவி தனிஷா நன்றியுரை வழங்கினார். ரோட்டரி ஆலோசகர் கார்த்திகேயன், ஆசிரியர் ஆலோசகர் ஃபனீதா, கோயம்புத்தூர் சேஞ்ச்மேக்கர்ஸ் ரோட்டராக்ட் கிளப்பின் முன்னாள் தலைவர் விஷ்ணு மற்றும் ரோட்டராக்டர்கள் முத்துராஜ், அகிலன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்தனர்.
Prasanth Subramani