ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு LPG மானியம் நிறுத்தப்படுமா?
ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ள LPG வாடிக்கையாளர்களுக்கு மானியம் நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றன.
நாடு முழுவதும் வீட்டு உபயோக LPG சிலிண்டர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ள வாடிக்கையாளர்களுக்கு LPG மானியம் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
இதுவரை வீட்டு உபயோக LPG சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து விலை உயர்வு, முன்பதிவு உள்ளிட்ட தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டு வந்தன. தற்போது, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்தை மீறும் வாடிக்கையாளர்களுக்கு புதிய குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த குறுஞ்செய்தியில், வருமான விவரங்களை உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளதாகவும், 7 நாட்களுக்குள் பதிலளிக்காவிட்டால் LPG மானியம் நிறுத்தப்படும் என்றும் கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
???? LPG மானியம் எப்படி வழங்கப்படுகிறது?
முன்னதாக, LPG சிலிண்டர்களுக்கான மானியம் எண்ணெய் நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. பின்னர், மத்திய அரசு Direct Benefit Transfer (DBT) முறையை அறிமுகப்படுத்தியது.
அதன்படி, வாடிக்கையாளர்கள் முழு தொகையை செலுத்தி சிலிண்டர் வாங்கிய பிறகு, மானியத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
தொடக்கத்தில் சில நூறு ரூபாயாக இருந்த மானியத் தொகை, காலப்போக்கில் குறைந்து தற்போது சுமார் ரூ.24.50 அளவுக்கு வந்துள்ளது.
???? ஆதார் இணைப்பு அவசியம்
LPG இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டது. இதன் மூலம் மானியம் பெறும் பயனாளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அதிக வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மானியத்தை நிறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்ற தகவல் பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
Prasanth Subramani