4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி.. உயர்வுடன் முடிந்த இந்திய பங்குச் சந்தை

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அரசியல் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், கடந்த 4 நாட்கள் சரிந்திருந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சற்றே உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி.. உயர்வுடன் முடிந்த இந்திய பங்குச் சந்தை

உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட காரணங்களால் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்திருந்த இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், இன்றைய வர்த்தகத்தில் சற்றே உயர்வுடன் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் குறியீடு அதிகபட்சமாக 75,191.57 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 74,134.48 புள்ளிகளையும் தொட்டது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 49.74 புள்ளிகள் உயர்ந்து 74,608.98 புள்ளிகளாக நிலைபெற்றது.

அதேபோல், நிஃப்டி குறியீடும் 33.05 புள்ளிகள் உயர்ந்து 23,412.60 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

சென்செக்ஸ் பட்டியலில் Asian Paints, Tata Steel, Adani Ports, Bharat Electronics, Bharti Airtel மற்றும் Larsen & Toubro நிறுவனங்களின் பங்குகள் உயர்வைக் கண்டன.

மறுபுறம் Mahindra & Mahindra, Infosys, Tata Consultancy Services, Sun Pharma மற்றும் Tech Mahindra உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.1,959.39 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

தொடர்ச்சியான இரண்டு நாள் விற்பனை அழுத்தத்துக்குப் பிறகு, இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஒப்பீட்டளவில் மீட்சியுடன் வர்த்தகத்தை முடித்தன.

நேற்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், சமையலறைப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலையேற்றம் காரணமாக இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 3.48 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கெய் 225, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் உள்ளிட்ட முக்கிய குறியீடுகள் உயர்வுடன் முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் கலவையான போக்கில் வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் நேற்று பெரும்பாலும் சரிவுடன் முடிவடைந்தன.

இதற்கிடையில், உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.5 சதவீதம் சரிந்து, பீப்பாய் ஒன்றுக்கு 107.27 அமெரிக்க டாலராக வர்த்தகமாகி வருகிறது.