சாமரி அத்தபத்து சதம்.. அயர்லாந்தை நொறுக்கி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி!
ICC மகளிர் T20 உலகக்கோப்பை 2026 தொடரில் சாமரி அத்தபத்து சதம் விளாசி அசத்தியதால் அயர்லாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை முக்கிய வெற்றியை பதிவு செய்தது.
ICC மகளிர் T20 உலகக்கோப்பை 2026 தொடரின் 20வது லீக் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி ஆதிக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அயர்லாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் நாயகியாக கேப்டன் சாமரி அத்தபத்து திகழ்ந்தார். அபாரமான சதம் விளாசிய அவர், போட்டியை ஒருதலைப்பட்சமாக மாற்றி இலங்கைக்கு முக்கிய வெற்றியை பெற்றுத் தந்தார்.
பிரிஸ்டலில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே மிதாலி அயோத்யா மற்றும் சுகந்திகா குமாரி ஆகியோர் துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அயர்லாந்தை நெருக்கடிக்குள் தள்ளினர்.
ஏமி ஹண்டர் ரன் அவுட்டாக வெளியேறியதுடன், ஆர்லா பிரெண்டர்காஸ்ட் உள்ளிட்ட முக்கிய வீராங்கனைகளும் விரைவில் பெவிலியன் திரும்பினர். இதனால் அயர்லாந்து வெறும் 3 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த சூழலில் கேப்டன் கேபி லூயிஸ் பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டெடுக்க முயன்றார். ரெபேக்கா ஸ்டோகெல் ஆரம்பத்தில் அதிரடி காட்டிய நிலையில், பின்னர் கேபி லூயிஸ் தனிப்போராட்டம் நடத்தினார். நடுப்பகுதியில் அரைசதம் அடித்த அவர், அணியின் ஸ்கோரை உயர்த்த முக்கிய பங்கு வகித்தார்.
இறுதி ஓவர்களில் ஆலிஸ் டெக்டர் சில அதிரடி பவுண்டரிகள் அடித்ததால் அயர்லாந்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது. இலங்கை பந்துவீச்சாளர்களில் மிதாலி அயோத்யா மற்றும் சாமரி அத்தபத்து முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
131 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு சாமரி அத்தபத்து மற்றும் இமேஷா துல்சினி இணைந்து அசத்தலான தொடக்கத்தை வழங்கினர். ஆரம்பம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய சாமரி, அயர்லாந்து பந்துவீச்சாளர்களை எந்த விதத்திலும் செட்டில் ஆக விடவில்லை.
பவர் பிளே முடிவில் இலங்கை விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் குவித்தது. இதில் பெரும்பாலான ரன்களை சாமரியே அடித்திருந்தார். அவர் அடித்த ஒவ்வொரு பவுண்டரியும் இலங்கை வெற்றியை மேலும் நெருக்கமாக்கியது.
இமேஷா மறுமுனையில் அமைதியாக விளையாடி கேப்டனுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கினார். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்து போட்டியின் முடிவை முன்கூட்டியே தீர்மானித்தனர்.
இமேஷா ஆட்டமிழந்த பின்னரும் சாமரி தனது அதிரடியை தொடர்ந்தார். அரைசதத்தை கடந்த அவர், பின்னர் சதத்தை நோக்கி வேகமாக முன்னேறினார். அயர்லாந்து பந்துவீச்சாளர்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல் விளையாடிய அவர், தனது நான்காவது T20 சர்வதேச சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார்.
10வது உலகக்கோப்பையில் விளையாடும் சாமரி அத்தபத்து, மகளிர் T20 உலகக்கோப்பை வரலாற்றில் சதம் அடித்த ஆறாவது வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
இறுதியில் 15.3 ஓவர்களிலேயே இலங்கை 1 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் சதம் விளாசி போட்டியின் நாயகியாக திகழ்ந்தார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முந்தைய போட்டியில் ஏற்பட்ட ஏமாற்றத்தை இந்த வெற்றியின் மூலம் இலங்கை மறக்கச் செய்துள்ளது. குறிப்பாக கேப்டனாக தனது செயல்பாடு குறித்து விமர்சனங்களை சந்தித்த சாமரி அத்தபத்து, இந்த சதத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அவரது இந்த கேப்டன்ஸ் இன்னிங்ஸ் இலங்கை அணிக்கு மட்டுமல்ல, உலக மகளிர் கிரிக்கெட்டிற்கே மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது.
Prasanth Subramani