த்ரில் வெற்றி பெற்ற ஆர்சிபி: மும்பையை 2 விக்கெட்டில் வீழ்த்தியது பெங்களூரு
ஐபிஎல் 2026 தொடரில் கிருணால் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இண்டியன்ஸை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐபிஎல் 2026 தொடரின் 54-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை பரபரப்பான முறையில் வீழ்த்தியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய பெங்களூரு அணி கடைசி ஓவர்வரை நீண்ட த்ரில் போட்டியில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரயான் ரிக்கெல்டன் மற்றும் ரோஹித் சர்மா விரைவில் ஆட்டமிழந்தனர். ரோஹித் 22 ரன்கள் எடுத்தார்.
சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்த நிலையில், நமன் திர் மற்றும் திலக் வர்மா இணைந்து அணியை மீட்டனர்.
இருவரும் 4-ஆவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர். நமன் திர் 47 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து திலக் வர்மா அதிரடியாக விளையாடி 57 ரன்கள் குவித்தார்.
இறுதியில் மும்பை அணி 166 ரன்கள் என்ற போட்டித்திறன் கொண்ட இலக்கை நிர்ணயித்தது.
பெங்களூரு அணியின் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜாஷ் ஹேஸில்வுட், ராசிக் சலாம் மற்றும் ரொமேரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
167 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது.
விராட் கோலி டக் அவுட்டாக வெளியேறினார். தேவ்தத் படிக்கல் 12 ரன்களிலும், கேப்டன் ரஜத் பட்டிதார் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் ஜேக்கப் பெத்தெல் 27 ரன்கள் சேர்த்து அணியை ஓரளவு நிலைநிறுத்தினார்.
இந்நிலையில் கிருணால் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பெங்களூருவை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார். அவர் 46 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும்.
ஜிதேஷ் சர்மா 18 ரன்கள் எடுத்தார். டிம் டேவிட் ரன்னின்றி வெளியேறினார்.
இறுதி ஓவரில் பரபரப்பான சூழலில் ராசிக் சலாம் மற்றும் புவனேஷ்வர் குமார் அமைதியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
மும்பை அணியின் பந்துவீச்சில் கார்பின் பாஷ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். தீபக் சஹர் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி பிளேஆஃப் போட்டிக்கான வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
Prasanth Subramani