ஈரான் பதில் ‘முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது’ – டிரம்ப் கடும் தாக்கு
அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈரான் அளித்த பதில் ஏற்றுக்கொள்ள முடியாதது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில், அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக ஈரான் அளித்த பதில் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அமெரிக்க அதிபர் Donald Trump கடுமையாக விமர்சித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவருதல், ஈரான் மீதான தடைகளை நீக்குதல், முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்தல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட அம்சங்களை மையமாகக் கொண்டு பாகிஸ்தான் மூலமாக அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட டிரம்ப், ஈரான் பிரதிநிதிகளிடமிருந்து வந்த பதிலை தாம் படித்ததாகவும், அது தனக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். “அந்த பதில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் மத்தியஸ்தம் மூலம் அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் தனது பதிலை அனுப்பியுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த பேச்சுவார்த்தையின் முதன்மை நோக்கம் பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஈரானின் முன்மொழிவில், அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும், ஈரானிய துறைமுகங்களின் கடல்வழி முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் மற்றும் பிராந்தியத்திலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போரை நிறுத்த வேண்டும் என்பதும் ஈரானின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் சூழலில், பதிலடி தாக்குதல்கள் தொடர்பான தனது கட்டுப்பாட்டு கொள்கையை கைவிடக்கூடும் என ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் பிரிட்டன் தனது போர்க்கப்பலை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் போர்க்கப்பல்களை நிறுத்தக்கூடாது என்றும், அப்படி நடந்தால் தகுந்த பதிலடி வழங்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக சர்வதேச கப்பல் போக்குவரத்து தடையின்றி நடைபெற வேண்டும் என்றும், கப்பல்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிராந்திய நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் China வலியுறுத்தியுள்ளது.
Prasanth Subramani