சொகுசு கப்பலில் ஹண்டா வைரஸ் தாக்கம் – 3 பேர் உயிரிழப்பு

நெதர்லாந்தைச் சேர்ந்த சொகுசு கப்பலில் ஹண்டா வைரஸ் பரவி 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சொகுசு கப்பலில் ஹண்டா வைரஸ் தாக்கம் – 3 பேர் உயிரிழப்பு

நெதர்லாந்தைச் சேர்ந்த சொகுசு சுற்றுலா கப்பலில் ஹண்டா வைரஸ் தொற்று பரவியதில் 3 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆர்ஜென்டினாவிலிருந்து அன்டார்டிகா வழியாக ஆப்பிரிக்காவின் கேப் வெர்டே தீவு நாட்டை நோக்கி பயணித்த “எம்.வி. ஹோண்டியஸ்” கப்பலில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கப்பலில் மொத்தம் 150 பயணிகள் இருந்தனர்.

உயிரிழந்தவர்களில் இருவர் நெதர்லாந்தைச் சேர்ந்த தம்பதியினர் என்றும், மற்றொருவரின் விவரங்கள் இன்னும் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில் ஹண்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எலிகளின் எச்சம், சிறுநீர் மற்றும் உமிழ்நீர் மூலம் காற்றில் பரவும் இந்த வைரஸ், மனிதர்களுக்கு கடுமையான சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியது. ஆரம்பத்தில் காய்ச்சல் மற்றும் தசை வலி போன்ற அறிகுறிகளுடன் தொடங்கி, பின்னர் இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது கேப் வெர்டே கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள இந்த கப்பலில் உள்ள பயணிகளை தரையிறங்க அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது. மற்ற பயணிகளின் உடல்நிலை குறித்து உலக சுகாதார அமைப்பு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் உடல்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் விமானம் மூலம் நெதர்லாந்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.