மருத்துவக் காப்பீட்டு சிகிச்சை தொகை ரூ.25 லட்சமாக உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான தொகை ஆண்டுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச மருத்துவ சிகிச்சைக்கான ஆண்டு வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கியமான மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்த அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டார்.
வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையில், பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சைக்கான தொகை ஆண்டுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும். இதன் மூலம் காப்பீட்டு திட்டத்தின் பயனாளிகளுக்கு அதிக அளவிலான மருத்துவச் சிகிச்சை பாதுகாப்பு கிடைக்கும்.
திருநங்கையருக்கான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளன. சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஏழு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த சேவைகள் வழங்கப்படும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ.351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் செவிலியர் மற்றும் மருத்துவப் பணியாளர் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும். மேலும், ஏழு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, 660 பி.எஸ்சி. செவிலியர் மாணவர் இடங்கள் உருவாக்கப்படும்.
ஏற்கனவே செயல்பட்டு வரும் செவிலியர் கல்லூரிகள் மற்றும் செவிலியர் பள்ளிகளில் கூடுதலாக 6,098 மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோயைத் தடுப்பதற்கும், தரமான சிகிச்சையை வழங்குவதற்கும் ரூ.673 கோடி மதிப்பீட்டில் முதல்வரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.471 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் 14 தளங்களுடன் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.
தஞ்சாவூர், கோவை, மதுரை, திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் நிறுவப்படும். முதல் கட்டமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூ.84 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் எட்டு தளங்களுடன் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும்.
மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.106 கோடி மதிப்பீட்டில் ரோபோடிக் அறுவை சிகிச்சை கருவிகள், லீனியர் ஆக்சிலரேட்டர் கதிர்வீச்சு கருவிகள் உள்ளிட்ட நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
மருத்துவக் காப்பீட்டு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்துவது முதல் புதிய உயர் சிறப்பு மருத்துவமனைகள், புற்றுநோய் சிகிச்சை மையங்கள், செவிலியர் கல்வி இடங்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் மூலம் மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
Prasanth Subramani