ஹேலி மேத்யூஸ் மாயம்.. இலங்கையை வீழ்த்தி அரையிறுதியை நெருங்கிய வெஸ்ட் இண்டீஸ்!
ICC மகளிர் T20 உலகக்கோப்பை 2026 தொடரில் ஹேலி மேத்யூஸின் அபார பந்துவீச்சால் இலங்கையை 98 ரன்களுக்கு சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ், 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரையிறுதி வாய்ப்பை வலுப்படுத்தியது.
ICC மகளிர் T20 உலகக்கோப்பை 2026 தொடரின் 17வது லீக் சுற்றுப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆதிக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதி வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
பிரிஸ்டலில் நடைபெற்ற இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே ஹேலி மேத்யூஸ் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இலங்கை அணியை கடும் நெருக்கடிக்குள் தள்ளினார்.
விஷ்மி குணரத்னே, கேப்டன் சாமரி அத்தபத்து மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரமா ஆகிய முக்கிய விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றிய ஹேலி மேத்யூஸ், இலங்கையின் பேட்டிங் வரிசையை சிதறடித்தார். இதனால் இலங்கை அணி வெறும் 9 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த நெருக்கடியான சூழலில் இமேஷா துல்சினி, கவிஷா தில்ஹாரி மற்றும் நிலாக்ஷிகா சில்வா ஆகியோர் போராடி அணியை மீட்டெடுக்க முயன்றனர். குறிப்பாக நிலாக்ஷிகா மற்றும் கவிஷா இணைந்து முக்கியமான கூட்டணியை அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
எனினும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் இலங்கை அணியால் பெரிய கூட்டணியை அமைக்க முடியவில்லை. ஆலியா அலீன், அஃபி ஃப்ளெட்சர் மற்றும் கரிஷ்மா ராம்ஹரக் ஆகியோர் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இறுதியில் இலங்கை அணி 19.4 ஓவர்களில் 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 100 ரன்களை எட்ட முடியாமல் வெறும் இரண்டு ரன்கள் குறைவாக இன்னிங்ஸை முடித்தது இலங்கைக்கு ஏமாற்றமாக அமைந்தது.
99 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் சற்று சவால் அளித்தனர். ஹேலி மேத்யூஸ் மற்றும் டியாண்ட்ரா டாட்டின் ஆகிய இரு அனுபவ வீராங்கனைகளின் விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றி இலங்கை நம்பிக்கையை உயிர்ப்பித்தது.
ஆனால் அனுபவ வீராங்கனை ஸ்டெஃபனி டெய்லர் அமைதியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். நடுப்பகுதியில் சில விக்கெட்டுகள் விழுந்தாலும், தேவையான ரன் வேகம் மிகவும் குறைவாக இருந்ததால் வெஸ்ட் இண்டீஸ் எந்த பெரிய அழுத்தத்தையும் சந்திக்கவில்லை.
16.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணிக்காக கவிஷா தில்ஹாரி மற்றும் சாமரி அத்தபத்து போராடிய போதிலும், குறைந்த இலக்கை பாதுகாக்க முடியவில்லை.
போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே எதிரணியின் முக்கிய பேட்டர்களை வெளியேற்றி வெற்றிக்கு அடித்தளம் அமைத்த ஹேலி மேத்யூஸ் ஆட்டநாயகி விருதை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் 6 புள்ளிகளுடன் அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மறுபுறம், இலங்கை அணி பேட்டிங்கில் ஏற்பட்ட சரிவால் முக்கியமான போட்டியை இழந்து பின்னடைவை சந்தித்துள்ளது. உலகக்கோப்பை தொடரின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் நிலையில், இந்த வெற்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை வழங்கியுள்ளது.
Prasanth Subramani