GTA 6 நாளை ரிலீஸ்! நவம்பர் 19 வெளியீட்டை உறுதி செய்த ராக்ஸ்டார் – உலகம் முழுவதும் தொடங்கிய முன்பதிவு டவுன்லோடு
GTA 6 வீடியோ கேம் நவம்பர் 19, 2026 அன்று வெளியாகிறது. முன்பதிவு செய்தவர்களுக்கு Pre-load வசதி தொடங்கியுள்ளது. 212 GB சேமிப்பிடம் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கேமர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6 (GTA 6) வீடியோ கேம் நாளை (நவம்பர் 19, 2026) வெளியாக உள்ளது. ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்த வெளியீட்டுத் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது. GTA 5 வெளியாகி கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புதிய பாகம் வெளியாகவுள்ளது. பிளேஸ்டேஷன் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் X|S தளங்களில் இந்த கேம் அறிமுகமாகிறது. முன்பதிவு செய்த வீரர்கள் முன்கூட்டியே கேமைப் பதிவிறக்கம் செய்யும் வகையில் டிஜிட்டல் Pre-load வசதியையும் ராக்ஸ்டார் தொடங்கியுள்ளது. அதிகாரப்பூர்வ ஆதரவுத் தகவலின்படி, சாதனத்தைப் பொறுத்து GTA 6 கேமை நிறுவுவதற்கு 212 GB வரை சேமிப்பிடம் தேவைப்படலாம்.
இந்தப் புதிய பாகத்தின் கதை, லியோனிடா என்ற கற்பனை மாநிலத்தில் அமைந்துள்ள வைஸ் சிட்டியில் நடைபெறுகிறது. ஜேசன் டுவால் மற்றும் லூசியா காமினோஸ் ஆகிய இரு முக்கிய கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு குற்றச் சதி தொடர்பான கதை நகர்கிறது. தற்போதைய தலைமுறை கன்சோல்களில் இந்த கேம் 30 FPS இலக்குடன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பிளேஸ்டேஷன் 5 Pro-வில் மேம்படுத்தப்பட்ட காட்சித் தொழில்நுட்ப வசதிகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 2026ஆம் ஆண்டுக்கான The Game Awards விருது விழாவில் GTA 6 மொத்தம் 8 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த விளையாட்டு (Game of the Year), சிறந்த கேம் இயக்கம், சிறந்த கதை, சிறந்த கலை இயக்கம், சிறந்த ஆக்ஷன்/அட்வென்ச்சர் கேம், சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த இசை மற்றும் சிறந்த நடிப்பு ஆகிய பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் மேன்னி எல். பெரெஸின் நடிப்பும் அங்கீகாரம் பெற்றுள்ளது.
மேலும், சீனாவின் Douyin தளம் உள்ளிட்ட சர்வதேச தளங்களில் ராக்ஸ்டார் நிறுவனம் GTA 6 வெளியீட்டுக்கான விளம்பர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சீனாவின் மெயின்லேண்ட் பகுதியில் இந்த கேமின் அதிகாரப்பூர்வ விற்பனைக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. நவம்பர் 18ஆம் தேதி வெளியான Reuters செய்தியின்படி, சந்தை ஆய்வு மதிப்பீடுகள் நவம்பர் 17ஆம் தேதி நிலவரப்படி GTA 6 சுமார் 15.9 மில்லியன் டிஜிட்டல் முன்பதிவுகளைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகின்றன. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கேமர்கள் வெளியீட்டுக்காகக் காத்திருக்கும் நிலையில், பொழுதுபோக்கு உலகின் மிகப்பெரிய வீடியோ கேம் வெளியீடுகளில் ஒன்றாக GTA 6 உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Prasanth Subramani