கோவையின் தொழில்துறை ஜாம்பவான் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'GDN' நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது
கோவையின் தொழில்துறை முன்னோடியும் 'இந்தியாவின் எடிசன்' என போற்றப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட 'GDN' திரைப்படம் ஆகஸ்ட் 7 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. ஆர். மாதவன், சத்யராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
கோவையின் தொழில்துறை வரலாற்றை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் வகையில், இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட 'GDN' திரைப்படம் ஆகஸ்ட் 7 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
'இந்தியாவின் எடிசன்' என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை, சாதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் ஆர். மாதவன் ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன் மற்றும் வினய் ராய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1930 முதல் 1950-கள் வரையிலான கோவையின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், அந்தக் காலகட்டத்தின் சூழல், தொழில்துறை வளர்ச்சி மற்றும் சமூக மாற்றங்களை மிகுந்த தத்ரூபமாக மீண்டும் திரையில் கொண்டு வருகிறது. குறிப்பாக, ஜி.டி. நாயுடுவின் புதுமையான கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு சிந்தனை மற்றும் இந்திய தொழில்துறைக்கான அவரது பங்களிப்புகளை விரிவாக சித்தரிக்கிறது.
மேலும், கோவை நகரம் இந்தியாவின் முன்னணி தொழில்துறை மையங்களில் ஒன்றாக உருவெடுத்த வரலாற்றுப் பயணத்தையும் இந்த திரைப்படம் பதிவு செய்கிறது. கோவையின் தொழில்முனைவு கலாச்சாரம், புதுமை மற்றும் வளர்ச்சியை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த படம் பார்க்கப்படுகிறது.
கோவை மக்களாலும், தமிழ் சினிமா ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'GDN' திரைப்படம், ஒரு மனிதரின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமல்லாமல், கோவையின் பெருமைமிக்க தொழில்துறை பாரம்பரியத்தையும் உலக அரங்கில் எடுத்துரைக்கும் முக்கிய படைப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் உலகளாவிய வெளியீடு, கோவையின் புகழையும் ஜி.டி. நாயுடுவின் மரபையும் புதிய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
Prasanth Subramani