நேபாளத்தில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிர்வு
நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் நவம்பர் 24ஆம் தேதி காலை 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் சிக்கிம், மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளில் உணரப்பட்டன.
நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கோஷி மாகாணத்தில் இன்று (நவம்பர் 24) காலை 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி காலை 7.02 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, நேபாளத்தின் தப்லேஜுங் மாவட்டத்தில் உள்ள ஒலாங்சுங் கோலா அருகே கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளன. மேலும் பூடான், வங்கதேசம் மற்றும் சீனாவின் சில பகுதிகளிலும் அதிர்வுகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.
இதுவரை இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அல்லது பெரிய அளவிலான பொருட்சேதங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Prasanth Subramani