திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் நிபந்தனையற்ற மன்னிப்பு! 5,797 போலீசார் பாதுகாப்புப் பணி

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத விவகாரத்தில் மதுரை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்து நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் நிபந்தனையற்ற மன்னிப்பு! 5,797 போலீசார் பாதுகாப்புப் பணி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும், இருப்பினும் தீபத்தூணில் விளக்கேற்றப்படாததற்கு வருத்தம் தெரிவித்து நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தீபத்தூணில் விளக்கேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோயில் அறங்காவலர் குழுவிடம் வலியுறுத்தியதாகவும், ஆனால் கோயில் நிர்வாகம் வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள இடத்திலேயே விளக்கேற்ற முடிவு செய்ததாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், தீபத்தூணில் விளக்கேற்றுவதற்காக அமைக்கப்பட்ட குழுவுக்கு கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்றும், அனுமதியின்றி வேறு நபர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். கார்த்திகை தீபத் திருநாளின்போது பாதுகாப்புப் பணிக்காக மொத்தம் 5,797 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் தரப்பினர் முறையான மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்த மனுக்களைப் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.