கோவை–மும்பை இடையே தினமும் 2 நேரடி விமானங்கள்: செப்டம்பர் 1 முதல் புதிய சேவையை தொடங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

கோவை–மும்பை இடையேயான விமான சேவையை விரிவுபடுத்தும் வகையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 1 முதல் தினமும் இரண்டு நேரடி விமானங்களை இயக்குகிறது. காலை மற்றும் இரவு என இரண்டு புதிய சேவைகள் பயணிகளுக்கு அறிமுகமாகின்றன.

கோவை–மும்பை இடையே தினமும் 2 நேரடி விமானங்கள்: செப்டம்பர் 1 முதல் புதிய சேவையை தொடங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

கோவை மற்றும் மும்பை இடையேயான விமானப் போக்குவரத்து மேலும் வலுப்பெற உள்ளது. பயணிகளின் அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் செப்டம்பர் 1 முதல் தினமும் இரண்டு நேரடி விமான சேவைகளை அறிமுகப்படுத்துகிறது.

புதிய அட்டவணையின்படி, கோவையிலிருந்து மும்பைக்கு தினமும் இரண்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. முதல் விமானம் காலை 9.00 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு காலை 11.10 மணிக்கு மும்பையை சென்றடையும். இரண்டாவது விமானம் இரவு 9.45 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு மும்பையை சென்றடையும்.

அதேபோல், மும்பையிலிருந்து கோவைக்கு தினமும் இரண்டு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. முதல் விமானம் காலை 6.20 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்டு காலை 8.20 மணிக்கு கோவையை வந்தடையும். இரண்டாவது விமானம் மாலை 7.10 மணிக்கு புறப்பட்டு இரவு 9.05 மணிக்கு கோவையை சென்றடையும்.

காலை மற்றும் இரவு என இரண்டு நேரடி விமான சேவைகள் அறிமுகமாகுவதால், தொழில்முறை பயணிகள், தொழிலதிபர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தை வசதிக்கேற்ப திட்டமிட முடியும். குறிப்பாக, இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பைக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் கோவை மற்றும் மேற்கு தமிழ்நாடு பகுதி மக்களுக்கு இந்த புதிய சேவை பெரும் பயனளிக்கும்.

புதிய விமான சேவைகள் அறிமுகமாகுவதன் மூலம் கோவை–மும்பை இடையேயான விமான இணைப்பு மேலும் மேம்படுவதுடன், தொழில், வர்த்தகம், கல்வி மற்றும் சுற்றுலா துறைகளுக்கும் இது குறிப்பிடத்தக்க ஊக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.