நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட நீட் 2026 தேர்வுக்கான மறுதேர்வில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மறுதேர்வுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று National Testing Agency தேசிய தேர்வு முகமை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வின் வினாத்தாள் ராஜஸ்தானில் கசிந்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் சிறப்பு விசாரணைக் குழு மேற்கொண்ட விசாரணையில், தேர்வில் இடம்பெற்றிருந்த கேள்விகளுடன் ஒத்த சுமார் 140 கேள்விகள் கொண்ட கையெழுத்து மாதிரி வினாத்தாள் கைப்பற்றப்பட்டது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மேலும், மறுதேர்வு நடத்தப்படும் என்றும், அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026 மே மாத நீட் தேர்வுக்காக மாணவர்கள் பதிவு செய்த விவரங்கள், தகுதிநிலை மற்றும் தேர்வு மையங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் மறுதேர்வுக்கும் அப்படியே பயன்படுத்தப்படும். மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன், “மறுதேர்வுக்காக கூடுதல் தேர்வுக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. மாணவர்கள் ஏற்கெனவே செலுத்திய கட்டணங்கள் திருப்பியளிக்கப்படும். தேசிய தேர்வு முகமையின் நிதியிலிருந்தே மறுதேர்வு நடத்தப்படும்” என்றும் விளக்கப்பட்டுள்ளது.
Prasanth Subramani