சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றவாளிகள் மேற்கு வங்கத்தை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க மாநில எல்லைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மமதா பானர்ஜியை எதிர்த்து பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் ராத் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார்.
வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் தோஹாரியா பகுதியில் மர்ம நபர்கள் சந்திரநாத் ராத் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் எல்லைப் பகுதிகளில் தீவிர சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“இந்த தாக்குதல் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம். வெளி மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துப்பாக்கிச்சூட்டு நபர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
பல்வேறு பகுதிகளில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சம்பவம் நடந்த இடங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்ற விதம், அவர்கள் அந்தப் பகுதிக்கு நன்கு பரிச்சயமானவர்கள் அல்லது உள்ளூர் குற்றவாளிகளின் உதவி பெற்றிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. உள்ளூர் ஆதரவு இல்லாமல் குறுகிய சாலைகள் வழியாக விரைவாக தப்பிச் செல்வது சாத்தியமில்லை” என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவம் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.