மத்திய பிரதேசம் விபத்து: மினி லாரி மோதியதில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
மத்திய பிரதேசத்தில் மினி லாரி மற்றும் கார் மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். அதிக வேகம் மற்றும் அதிக பயணிகள் ஏற்றம் விபத்திற்குக் காரணம் என தகவல்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கார் மீது மினி லாரி மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
தார் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில், சுமார் 35 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி இந்தூர் – அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி எதிர் திசையில் வந்த எஸ்யூவி வகை கார் மீது மோதி கவிழ்ந்தது. இந்த மோசமான விபத்தில், லாரியில் பயணித்தவர்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த சுமார் 20 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அதிக அளவில் பயணிகளை ஏற்றியதும், அதிவேகமாக இயக்கியதும் விபத்திற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 4 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
Prasanth Subramani