சென்னை vs டெல்லி: பிளேஆஃப் கனவை காக்க முக்கிய மோதல் இன்று
ஐபிஎல் 2026-ல் சென்னை மற்றும் டெல்லி அணிகள் இன்று மோதுகின்றன. பிளேஆஃப் வாய்ப்பை நிலைநிறுத்த இரு அணிகளுக்கும் வெற்றி அவசியம்.
ஐபிஎல் 2026 தொடரின் 48-ஆவது போட்டியில், சென்னை அணி மற்றும் டெல்லி அணி இன்று (மே 5) மோதுகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
வெற்றி மற்றும் தோல்வி கணக்கில் இரு அணிகளும் சமநிலையிலேயே இருந்தாலும், நெட் ரன்ரேட் அடிப்படையில் சென்னை அணி முன்னிலையில் உள்ளது. பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள, இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் அவசியமாகியுள்ளது.
சென்னை அணியைப் பொருத்தவரை, தொடர்ச்சியான வெற்றி இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் விளையாடி வருகிறது. இன்னொரு தோல்வி ஏற்பட்டால், பிளேஆஃப் பந்தயத்தில் இருந்து விலகும் அபாயம் உள்ளது.
அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சமீபத்திய போட்டியில் அரைசதம் அடித்து ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதேபோல், சஞ்சு சாம்சன் தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும், அணியில் இணைந்துள்ள உர்வில் படேல் மற்றும் கார்த்திக் சர்மா ஆகியோர் தங்களது திறமையை நிரூபித்து வருகிறார்கள். பந்துவீச்சில் அன்ஷுல் காம்போஜ், நூர் அகமது மற்றும் ஜேமி ஓவர்டன் முக்கிய பங்காற்றுகின்றனர்.
டெல்லி அணியைப் பொருத்தவரை, தொடர்ந்து மூன்று தோல்விகளுக்குப் பிறகு வெற்றி பெற்று இந்தப் போட்டிக்குத் தயாராகிறது. இருப்பினும், சொந்த மைதானத்தில் இதுவரை விளையாடிய போட்டிகளில் பெரும்பாலும் தோல்வி அடைந்ததால், இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் முயற்சியில் இருக்கும்.
தொடக்க வீரர் பதும் நிசங்கா சிறப்பாக விளையாடி வருவது அணிக்கு உற்சாகமாக உள்ளது. கே.எல்.ராகுல் தொடர்ந்து ரன்கள் சேர்த்து வருகிறார். நிதீஷ் ராணா மற்றும் ஆசுதோஷ் சர்மா ஆகியோரும் அணிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
பந்துவீச்சில் காயத்திலிருந்து மீண்ட மிட்செல் ஸ்டார்க் தனது முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். குல்தீப் யாதவ் மற்றும் டி.நடராஜன் ரன்களை கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ளனர்.
இரு அணிகளுக்கும் சமமான திறன் உள்ள நிலையில், இன்று நடைபெறும் இந்தப் போட்டி பரபரப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Prasanth Subramani