வங்கி பங்குகள் சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 456 புள்ளிகள் வீழ்ச்சி; நிஃப்டியும் சரிவு
வங்கி மற்றும் நிதித்துறை பங்குகள் சரிவு, ஹோர்முஸ் நீரிணை பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக சென்செக்ஸ் 455.59 புள்ளிகளும், நிஃப்டி 65.35 புள்ளிகளும் சரிந்து நிறைவடைந்தன.
கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளில் தொடர்ந்து உயர்வைக் கண்ட இந்திய பங்குச் சந்தை, வெள்ளிக்கிழமை சரிவுடன் நிறைவடைந்தது. வங்கி மற்றும் நிதித்துறை பங்குகளில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம், ஹோர்முஸ் நீரிணை தொடர்பான உலகளாவிய நிச்சயமற்ற சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை சந்தையின் போக்கை பாதித்தன.
30 முன்னணி பங்குகளை கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 455.59 புள்ளிகள் சரிந்து 78,499.17 புள்ளிகளில் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் போது அதிகபட்சமாக 577.69 புள்ளிகள் சரிந்து 78,377.07 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 50 குறியீடு 65.35 புள்ளிகள் சரிந்து 24,570.65 புள்ளிகளில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே 113.25 புள்ளிகள் வரை சரிந்து 24,522.75 புள்ளிகளை எட்டியது.
நிறுவனங்களின் காலாண்டு வருவாய் முடிவுகள் எதிர்பார்த்ததை விட சாதகமாக இருந்தபோதிலும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நீடித்துவரும் நிச்சயமற்ற நிலை மற்றும் நிதித்துறை பங்குகளில் ஏற்பட்ட பலவீனம் முதலீட்டாளர்களின் மனநிலையை பாதித்தது.
சென்செக்ஸ் பட்டியலில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), மஹிந்திரா & மஹிந்திரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் டெக் மஹிந்திரா பங்குகள் உயர்வுடன் முடிவடைந்தன. அதே நேரத்தில், பஜாஜ் ஃபைனான்ஸ் 5.90 சதவீதமும், பஜாஜ் ஃபின்சர்வ் 4.18 சதவீதமும் சரிந்தன. மேலும் ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ட்ரெண்ட் மற்றும் ஏசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட முக்கிய பங்குகளும் இழப்பை சந்தித்தன.
இதற்கிடையில், பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் ஒப்பந்தங்களைக் கொண்ட தகுதியான பங்குகளுக்கு இந்திய பங்குச் சந்தை புதிய இறுதி ஏல முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த முறை, இறுதி விலை நிர்ணயத்தை மேலும் வெளிப்படையானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கி 225 குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. மறுபுறம், சீனாவின் ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடுகள் உயர்வைக் கண்டன. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் முந்தைய அமர்வில் சரிவுடன் நிறைவடைந்தன.
பங்குச் சந்தை தரவுகளின்படி, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வியாழக்கிழமையன்று ரூ.17.86 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர். இதேவேளை, உலகளாவிய ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.35 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய்க்கு 82.20 அமெரிக்க டாலராக வர்த்தகமானது.
Prasanth Subramani