ஹோர்முஸ் நீரிணை திறக்க ஈரான் கோரிக்கை – டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்ததாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் ஐ.நா. மாநாட்டில் அமெரிக்கா–ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை திறக்க ஈரான் கோரிக்கை – டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்

ஈரான் தற்போது நிலைகுலைந்த நிலையில் இருப்பதாகவும், ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் அரசு தாங்கள் வீழ்ச்சி நிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும், நாட்டின் தலைமைப் பொறுப்பில் நிலவும் குழப்பங்களுக்கிடையில், ஹோர்முஸ் நீரிணையை விரைவாக திறக்க வேண்டும் என ஈரான் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஈரான் அரசுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், அவை விரைவில் தீரும் என நம்புவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த தகவலை ஈரான் தரப்பில் யார் வழங்கினர், அமெரிக்கா அதை எவ்வாறு பெற்றது போன்ற விவரங்களுக்கு வெள்ளை மாளிகை இதுவரை தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.

முன்னதாக, அமெரிக்கா கடல்வழி தடைகளை நீக்கினால், போரை நிறுத்தி ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கத் தயாராக இருப்பதாக ஈரான் முன்மொழிந்தது. பாகிஸ்தான் மூலம் அனுப்பப்பட்ட இந்த திட்டத்தில், அணுசக்தி திட்ட விவாதங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என ஈரான் கோரியது. ஆனால், இந்த முன்மொழிவை அமெரிக்கா நிராகரித்தது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, “எந்த ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், அது ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதை முழுமையாகத் தடுக்கும் வகையில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யும் 11-வது ஐ.நா. மாநாடு நியூயார்க் நகரில் தொடங்கியுள்ளது. இதில் ஈரான் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அமெரிக்கா எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்த ஈரான் தூதர் ரெசா நஜாபி, “அணு ஆயுதங்களை தொடர்ந்து மேம்படுத்தும் அமெரிக்காவுக்கு, பிற நாடுகளிடம் ஒழுங்கு பேசும் தார்மீக உரிமை இல்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.