பங்குச் சந்தை அதிரடி மீட்சி.. சென்செக்ஸ் 790 புள்ளிகள் பாய்ச்சி, நிஃப்டி மீண்டும் 24,000 புள்ளிகளை கடந்தது!
கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் வங்கி, ஐடி பங்குகளில் ஏற்பட்ட வலுவான கொள்முதல் காரணமாக சென்செக்ஸ் 790 புள்ளிகளும், நிஃப்டி 197 புள்ளிகளும் உயர்ந்து வலுவான மீட்சியை பதிவு செய்தன.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவதும், வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளில் முதலீட்டாளர்கள் தீவிரமாக கொள்முதல் மேற்கொண்டதும் இந்திய பங்குச் சந்தைகளுக்கு புதிய உற்சாகத்தை அளித்தது. இதன் விளைவாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இன்று வலுவான மீட்சியை பதிவு செய்து உயர்வுடன் நிறைவடைந்தன.
காலை நேர வர்த்தகத்திலேயே முதலீட்டாளர்களின் வாங்கும் ஆர்வம் அதிகரித்ததால், சென்செக்ஸ் 989.69 புள்ளிகள் உயர்ந்து 77,190.37 புள்ளிகளை எட்டியது. நாள் முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 790.54 புள்ளிகள் அல்லது 1.04 சதவீதம் உயர்ந்து 76,991.22 புள்ளிகளாக முடிவடைந்தது.
அதேபோல், தேசிய பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான நிஃப்டி 197.55 புள்ளிகள் அல்லது 0.83 சதவீதம் உயர்ந்து 24,021.65 புள்ளிகளாக நிலைபெற்றது. இதன் மூலம் நிஃப்டி மீண்டும் 24,000 புள்ளிகளை கடந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தன. இன்டர்குளோப் ஏவியேஷன், ட்ரெண்ட், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தன.
மறுபுறம், என்டிபிசி, டாடா ஸ்டீல், மாருதி சுசுகி மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் போன்ற சில பங்குகள் மட்டும் சரிவை சந்தித்தன.
துறைவாரியாக பார்க்கும்போது தகவல் தொழில்நுட்ப மற்றும் ரியல்டி குறியீடுகள் தலா 2 சதவீதம் உயர்ந்தன. தனியார் வங்கி குறியீடும் 1.8 சதவீதம் உயர்ந்து சந்தைக்கு வலுசேர்த்தது. அதேநேரத்தில் ஆட்டோ, எனர்ஜி, மெட்டல் மற்றும் பவர் துறைகள் மட்டும் கலவையான செயல்பாட்டை வெளிப்படுத்தின.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளிலும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காணப்பட்டது. நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.10 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.4 சதவீதமும் உயர்ந்தன.
சந்தையின் நேர்மறை மனநிலைக்கு மற்றொரு முக்கிய காரணமாக அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் சாதகமான வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படலாம் என்ற தகவல் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
மேலும், மத்திய கிழக்கில் நிலவி வந்த அரசியல் பதற்றம் குறைந்து வருவதும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைவதும் சந்தைக்கு ஆதரவாக அமைந்தது. தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.69 சதவீதம் குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 75.78 அமெரிக்க டாலராக வர்த்தகமாகி வருகிறது.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் சந்தைக்கு ஆதரவளித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மட்டும் ரூ.17.86 கோடி மதிப்பிலான இந்திய பங்குகளை அவர்கள் வாங்கியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், கே.பி.ஆர் மில், ஏதர் இண்டஸ்ட்ரீஸ், கேப்ளின் பாயிண்ட் லேபரட்டரீஸ், வெல்ஸ்பன் லிவிங், நைகா நிறுவனத்தை நடத்தும் எஃப்.எஸ்.என் இ-காமர்ஸ் வென்ச்சர்ஸ், அபார் இண்டஸ்ட்ரீஸ், அரவிந்தோ பார்மா, சைடஸ் லைஃப் சயின்சஸ், குஜராத் ஃப்ளூரோகெமிக்கல்ஸ் மற்றும் லாரஸ் லேப்ஸ் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தை எட்டியுள்ளன.
சமீபத்திய சரிவுக்குப் பிறகு இந்திய பங்குச் சந்தை மீண்டும் வலுவான ஏற்றத்தை பதிவு செய்திருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. அடுத்த சில வர்த்தக அமர்வுகளில் உலக சந்தை நகர்வுகள், கச்சா எண்ணெய் விலை மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நடவடிக்கைகள் சந்தையின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும்.
Prasanth Subramani