ஓலா, உபர், ரேபிடோவில் பயணம் தொடங்கும் முன் டிப்ஸ் கேட்கத் தடை: அரசு அதிரடி உத்தரவு
ஓலா, உபர், ரேபிடோ உள்ளிட்ட கேப் மற்றும் பைக் டாக்ஸி சேவைகளில் பயணம் தொடங்கும் முன் டிப்ஸ் கேட்க அரசு தடை விதித்துள்ளது. பயணம் முடிந்த பிறகு மட்டுமே விருப்பத்தின்படி டிப்ஸ் வழங்கலாம்.
ஓலா, உபர், ரேபிடோ உள்ளிட்ட செயலி அடிப்படையிலான கேப் மற்றும் பைக் டாக்ஸி சேவைகளில் பயணம் தொடங்குவதற்கு முன்பாக டிப்ஸ் கேட்கும் நடைமுறைக்கு அரசு தடை விதித்துள்ளது.
பயணம் தொடங்குவதற்கு முன்பே டிப்ஸ் என்ற பெயரில் பயணிகளிடம் கூடுதல் தொகையை கேட்பது அல்லது வழங்குமாறு தூண்டுவது போன்ற நடைமுறைகள் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, டிப்ஸ் வழங்கினால் மட்டுமே பயணத்தை விரைவாக ஏற்றுக்கொள்வது, பயணத்தை உறுதி செய்வது அல்லது சிறந்த சேவை கிடைக்கும் என்ற வகையில் பயணிகளிடம் கூடுதல் தொகையை பெறும் நடைமுறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பயணம் தொடங்குவதற்கு முன் டிப்ஸ் வழங்குவது கட்டாயம் என்ற எண்ணத்தை பயணிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் செயலிகளில் எந்தவிதமான வசதிகளும் அல்லது அறிவுறுத்தல்களும் இடம்பெறக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.
பயணிகள் வழங்கும் டிப்ஸ் என்பது முற்றிலும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலானதாக மட்டுமே இருக்க வேண்டும். சேவை முடிவடைந்த பிறகு, ஓட்டுநரின் சேவையில் திருப்தி ஏற்பட்டால் பயணிகள் தங்களது விருப்பப்படி டிப்ஸ் வழங்கலாம்.
இதன் மூலம் பயணம் தொடங்குவதற்கு முன்பே பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பதுடன், செயலி மூலம் இயங்கும் கேப் மற்றும் பைக் டாக்ஸி சேவைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓலா, உபர், ரேபிடோ போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு இந்த புதிய நடைமுறை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பயணக் கட்டணத்திற்கு மேலாக முன்கூட்டியே டிப்ஸ் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால், பயணிகள் கூடுதல் செலவின்றி தங்களது பயணத்தை மேற்கொள்ள முடியும்.
மேலும், பயணம் முடிந்த பிறகு மட்டுமே பயணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் டிப்ஸ் வழங்கும் வாய்ப்பு இருப்பதால், டிப்ஸ் வழங்குவது முழுமையாக பயணிகளின் முடிவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளிடம் தேவையற்ற கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுப்பதுடன், கேப் மற்றும் பைக் டாக்ஸி சேவைகளில் நியாயமான கட்டண நடைமுறையை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Prasanth Subramani