தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்.

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்று (மே 7) 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.

மேலும், தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலிருந்து தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை, உள் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மே 8ஆம் தேதி மேலும் பல மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மே 7 முதல் 11 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை, இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரைவும் இருக்கக்கூடும்.