விஜய்க்கு ஆதரவாக போராட்டம்? மெரீனாவில் குவிக்கப்பட்ட போலீஸ்
தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தலாம் என்ற தகவலையடுத்து, சென்னை மெரீனா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து, சென்னை மெரீனா கடற்கரையில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் என்ற அறுதிப் பெரும்பான்மையை எட்டவில்லை.
இதனால், தனிப்பெரும் கட்சியான தவெகவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படாததற்கு எதிராக சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போன்ற வகையில் விஜய்க்கு ஆதரவாக இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் கூடவுள்ளதாக தகவல்கள் பரவின.
இதையடுத்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Prasanth Subramani