அக்ஷயா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா 26, விளையாட்டு விழா மற்றும் பணி நியமன விழா சிறப்பாக நடைபெற்றது

அக்ஷயா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டு விழா 26, விளையாட்டு விழா மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அக்ஷயா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா 26, விளையாட்டு விழா மற்றும் பணி நியமன விழா சிறப்பாக நடைபெற்றது

கிணத்துக்கடவில் அமைந்துள்ள அக்ஷயா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் “பணி நியமன ஆணை வழங்கும் விழா 26”, “விளையாட்டு விழா 26” மற்றும் “ஆண்டு விழா 26” ஆகிய மும்முக விழாக்கள் 30.04.2026 அன்று கல்லூரி கலையரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. மாணவர்களின் கல்வி, விளையாட்டு மற்றும் கலாச்சார முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் வகையில் இவ்விழா சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.

இவ்விழா கல்லூரியின் தலைவர் திரு. தி. சுப்பிரமணியன், அறங்காவலர் திரு. எஸ். பி. தியாகராஜன், தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் திரு. சு. கபிலன், கல்லூரி ஆலோசகர் முனைவர் ஆர். ஜோசப் சேவியர், முதல்வர் முனைவர் ஆர். ரவீந்தரன், துணை முதல்வர் முனைவர் கி. சிவசங்கரி மற்றும் அனைத்துத் துறைத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழா தமிழ்தாய் வாழ்த்து மற்றும் வரவேற்பு நடனத்துடன் இனிதே துவங்கியது. மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர். ரவீந்தரன் அவர்கள் வரவேற்புரையை வழங்கினார். துணை முதல்வர் முனைவர் கி. சிவசங்கரி அவர்கள் ஆண்டறிக்கையை வழங்கி, கல்லூரியின் கல்வி சாதனைகளை விளக்கினார். கல்லூரியின் தலைவர் மற்றும் ஆலோசகர் மாணவர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.

முதலில், இவ்வாண்டு கல்லூரியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு “சிறந்த மாணவர்” விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் “பணி நியமன ஆணை வழங்கும் விழா” நடைபெற்றது. இதில், வேலைவாய்ப்பு செயல்பாடுகள் குறித்த அறிக்கையை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை உதவி பேராசிரியர் திரு. வி. பாலமுருகன் வழங்கினார். பல்வேறு முன்னணி நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இது மாணவர்களின் உழைப்பிற்கும் கல்லூரியின் தரமான பயிற்சிக்கும் கிடைத்த பெருமையாகும்.

மேலும், கல்லூரியின் பல்வேறு மன்றங்களின் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து “விளையாட்டு விழா” நடைபெற்றது. அணிவகுப்பு முறையில் பல்வேறு விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்டம், மாநிலம், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் சாதனை புரிந்த மாணவர்கள் சிறப்பு விருதுகள் மற்றும் பணப் பரிசுகளுடன் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. தனிநடனம், குழு நடனம், பரதநாட்டியம் மற்றும் தற்காப்புக் கலைகள் போன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் மனதை கவர்ந்தன.

இவ்விழா ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் திறமையை வளர்க்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. மாணவர்களின் முழுமையான முன்னேற்றத்திற்காக கல்லூரி தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக வேதியியல் துறை பேராசிரியை திருமதி சி. நிர்மலா அவர்கள் நன்றியுரை வழங்க, தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுபெற்றது.