பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு தாமதம்? புதிய அரசு பதவியேற்பால் குழப்பம்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசு மற்றும் கல்வி அமைச்சர் பதவியேற்பு காரணமாக தேதி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாநிலப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அரசு இன்னும் அறிவிக்காததால், மாணவர்கள் மற்றும் பள்ளிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளன.
கடந்த ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டபோது, மே 8 ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் தற்போது புதிய அரசு பதவியேற்க உள்ளதால், முடிவுகள் வெளியீட்டில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கல்வி அமைச்சர் இன்னும் பொறுப்பேற்காத நிலையில், அவரின் ஒப்புதல் கிடைத்த பிறகே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன் கல்வி அமைச்சரின் அனுமதி பெறுவது வழக்கமாக இருந்து வருவதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். சில நேரங்களில் அமைச்சர்களே நேரடியாக முடிவுகளை வெளியிடுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் கே. சசிகலா தெளிவான பதில் அளிக்கவில்லை. அதேபோல், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பி. சந்திரமோகனும் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தவில்லை.
“பிளஸ் 2 தேர்வு முடிவுகளை இறுதிப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முடிவுகள் வெளியிடப்படும் தேதி குறித்து ஒரு நாள் முன்பாக அறிவிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கல்வியாளர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் மே மாத தொடக்கத்திலேயே முடிவுகள் வெளியிடப்பட்டதால், மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கை மற்றும் எதிர்கால திட்டங்களை எளிதாக முடிவு செய்ய முடிந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அரசின் நிர்வாக அனுமதி போன்ற எளிய நடைமுறைகள், மாணவர்களின் கல்வி செயல்முறைகளுக்கு தடையாக இருக்கக் கூடாது என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Prasanth Subramani