போலீஸ் பெயரில் வீடியோ கால் மோசடி: ‘Digital Arrest’ குறித்து சைபர் எச்சரிக்கை!
போலீஸ் அல்லது சிபிஐ அதிகாரிகள் போல வீடியோ கால் செய்து மிரட்டி பணம் பறிக்கும் ‘Digital Arrest’ மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணம் மற்றும் வங்கி தகவல்களை பகிர வேண்டாம்.
போலீஸ் மற்றும் சிபிஐ அதிகாரிகள் போல வீடியோ கால் செய்து பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் ‘Digital Arrest’ எனப்படும் சைபர் மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில், மோசடியாளர்கள் தங்களை போலீஸ் அல்லது சிபிஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு வீடியோ கால் மூலம் பொதுமக்களை தொடர்புகொள்கின்றனர். பின்னர், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவோ அல்லது அவர்களின் பெயரில் வழக்கு இருப்பதாகவோ கூறி அச்சுறுத்துகின்றனர்.
தொடர்ந்து, விசாரணை அல்லது வழக்கில் இருந்து தப்பிக்க பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி வங்கி கணக்கு விவரங்கள் அல்லது பணத்தைப் பெற முயற்சிக்கின்றனர்.
காவல்துறையில் ‘Digital Arrest’ என்ற பெயரில் எந்தவிதமான சட்ட நடைமுறையும் இல்லை. எனவே, போலீஸ் அல்லது சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி வீடியோ கால் மூலம் மிரட்டி பணம் கேட்கும் நபர்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
இதுபோன்ற சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால் உடனடியாக அழைப்பைத் துண்டிக்க வேண்டும். வங்கி கணக்கு விவரங்கள், கடவுச்சொல், ஓடிபி, ஏடிஎம் அல்லது கிரெடிட் கார்டு தகவல்கள் உள்ளிட்ட எந்தவொரு தனிப்பட்ட மற்றும் நிதி தகவல்களையும் பகிரக்கூடாது.
மேலும், வீடியோ கால் மூலம் மிரட்டல் விடுத்து பணம் செலுத்துமாறு வற்புறுத்தினால் எந்த சூழ்நிலையிலும் பணம் அனுப்பக்கூடாது.
சைபர் மோசடியில் பணத்தை இழந்திருந்தால் அல்லது மோசடி நடந்ததாக சந்தேகம் இருந்தால் உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும்.
பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு, அதிகாரிகள் பெயரில் வரும் சந்தேகத்திற்குரிய வீடியோ அழைப்புகள் மற்றும் பணம் கேட்கும் மோசடிகளில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
Prasanth Subramani