ரூபாய் மதிப்பு கடும் சரிவு – டாலருக்கு எதிராக ரூ.94.56 ஆக வீழ்ச்சி
கச்சா எண்ணெய் விலையேற்றம், வெளிநாட்டு நிதி வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால், இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக 41 காசுகள் சரிந்து ரூ.94.56 ஆக குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் அதிகரித்து வரும் அரசியல் நிச்சயமற்ற சூழ்நிலைக்கு மத்தியில், வெளிநாட்டு நிதி தொடர்ந்து வெளியேறியதால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 41 காசுகள் சரிந்து ரூ.94.56 ஆக குறைந்துள்ளது.
அந்நியச் செலாவணி வர்த்தகர்களின் தகவலின்படி, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மேலும் விரிவடையும் வாய்ப்பு இருப்பதால், ரூபாயின் மதிப்பு ஏற்கனவே பலவீனமடைந்துள்ளது.
மேலும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து தொடர்ந்து நிதியை வெளியேற்றி வருவது ரூபாயின் மதிப்பை மேலும் பாதித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை, 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீடு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.35 ஆக வர்த்தகத்தைத் தொடங்கியது. பின்னர், வர்த்தக நேரத்தில் மேலும் சரிந்து ரூ.94.58 என்ற குறைந்தபட்ச நிலையை எட்டியது.
இறுதியில், முந்தைய நாள் நிறைவு விலையை விட 41 காசுகள் குறைந்து ரூ.94.56 ஆக வர்த்தகம் முடிவடைந்தது.
இதற்கு முன் நடந்த வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு ஒரு காசு உயர்ந்து ரூ.94.15 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Prasanth Subramani