கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவிக்க உள்ளார் விஜய்
ஆட்சியமைக்க ஆதரவு அளித்த சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் சூழலில், ஆட்சியமைக்க ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக தலைவர் Vijay நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 233 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 107 பேர் எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர்கள் என்ற பெரும்பான்மையை எட்டுவதற்காக காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலா 2 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் தவெகவின் பலம் தற்போது 116 எம்எல்ஏக்களாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இன்னும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலை தொடர்கிறது.
தவெகவுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு அளிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.
இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழங்கிய ஆதரவு கடிதத்தை தவெக நிர்வாகி நிர்மல்குமார் நேரில் பெற்றுக்கொண்டார்.
மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில், தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு விஜய் நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கும் விஜய் சென்று ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Prasanth Subramani