ஹோர்முஸ் பதற்றம் தீவிரம்: ஈரான் மீண்டும் தாக்குதல் – அமெரிக்கா எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியது. போர் நிறுத்தம் தொடர்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்திய நிலையிலும், ஈரானுடனான போர் நிறுத்தம் தற்போது அமலில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 8 முதல் சுமார் ஒரு மாதமாக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், ஹோர்முஸ் நீரிணை மீது ஈரான் விதித்துள்ள முடக்கம் மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையில், பாரசீக வளைகுடா பகுதியில் சிக்கியுள்ள கப்பல்களை பாதுகாப்பாக வெளியேற்ற “புராஜெக்ட் ஃப்ரீடம்” என்ற ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
புதிய கடல் வழிப்பாதை மூலம் இதுவரை இரண்டு அமெரிக்க கப்பல்கள் மட்டுமே கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தலால், பல சர்வதேச கப்பல் நிறுவனங்கள் இன்னும் தயக்கம் காட்டி வருகின்றன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஃபுஜைராவில் உள்ள எண்ணெய் ஆலையில் ட்ரோன் தாக்குதல் நடந்ததில் 3 இந்தியர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இந்திய பிரதமர் Narendra Modi கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் பொது கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை ஏற்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவ அதிகாரிகள், “ஈரானின் நடவடிக்கைகள் இன்னும் முழுமையான போராக மாறவில்லை. எனவே போர் நிறுத்தம் முடிவடைந்ததாக கருத முடியாது” என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகள் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. ஈரான் நாடாளுமன்ற தலைவர் முகமது பாகர் கலிபாஃப், “எங்களின் முழு பதிலடி இன்னும் தொடங்கவே இல்லை” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம், அமெரிக்க அதிபர் Donald Trump, “ஈரான் இப்போது வெள்ளைக் கொடியை ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், ஹோர்முஸ் நீரிணை விவகாரம் மீண்டும் வளைகுடா பிராந்தியத்தில் பெரிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
Prasanth Subramani