ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்: 48 மணி நேரத்தில் முக்கிய பதில் எதிர்பார்ப்பு

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை கட்டுப்பாடுகள் நீக்கம் உள்ளிட்ட 14 அம்சங்கள் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்: 48 மணி நேரத்தில் முக்கிய பதில் எதிர்பார்ப்பு

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் தொடங்கி இரண்டு மாதங்களை கடந்துள்ள நிலையில், கடந்த ஏப்ரல் 8 முதல் சுமார் ஒரு மாதமாக போர் நிறுத்தம் அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் விதித்த கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரவும், அணுசக்தி தொடர்பான விரிவான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும், ஈரான் உடன் ஒரு பக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வெள்ளை மாளிகை இறுதி செய்துள்ளதாக Axios செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஈரான் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ பதிலை அமெரிக்கா எதிர்பார்த்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் தொடங்கிய பிறகு முதன்முறையாக, இரு நாடுகளும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மொத்தம் 14 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஈரான் அணு ஆயுத செறிவூட்டலுக்கு தற்காலிகத் தடை விதிப்பது, அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள பில்லியன் கணக்கான நிதியை ஈரானுக்கு விடுவிப்பது, ஹோர்முஸ் நீரிணை கட்டுப்பாடுகளை தளர்த்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அடங்கியுள்ளன.

மேலும், இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர், ஈரானிய மூத்த அதிகாரிகளுடன் நேரடியாகவும் மத்தியஸ்தர்கள் மூலமாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்தத்தின்படி, 30 நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை படிப்படியாக நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த முன்னேற்றம் மத்திய கிழக்கு அரசியல் சூழலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக பார்க்கப்படுகிறது.