தமிழகத்தில் ஏப்ரல் 30 முதல் கனமழை வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 30 முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என கணிப்பு.

தமிழகத்தில் ஏப்ரல் 30 முதல் கனமழை வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் ஏப்ரல் 30 முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தென் உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் மழை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 29ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மே 2ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 29 முதல் மே 3 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக கடலோர பகுதிகளில் அசௌகரியம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரைவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.