223 ரன்கள் இலக்கை சாய்த்த ராஜஸ்தான் – பஞ்சாப் அணிக்கு முதல் தோல்வி
ஐபிஎல் 2026 போட்டியில் பஞ்சாப் அணி 222 ரன்கள் எடுத்தாலும், ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
10 அணிகள் பங்கேற்றுள்ள ஐபிஎல் 2026 தொடரில் இந்தியாவின் பல நகரங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நடைபெற்ற 40-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அணி மற்றும் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. பிரியன்ஷி ஆர்யா 29 ரன்களில் அவுட்டானார். அதேசமயம் பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடினார். ஸ்டாய்னிஸ் 22 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அணிக்கு வேகத்தை கூட்டினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 223 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க வீரர் சூர்யவன்ஷி 16 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து வேகமான தொடக்கத்தை வழங்கினார்.
பின்னர் ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜுரெல் இணைந்து அணியை முன்னேற்றினர். ஜெய்ஸ்வால் அதிரடியாக அரைசதம் கடந்தார். ஜுரெல் 16 ரன்களில் அவுட்டானார்.
அதன்பின் கேப்டன் ரியான் பராக் மற்றும் டோனோவன் பெரெய்ரா களமிறங்கினர். பராக் 29 ரன்களில் வெளியேறிய நிலையில், தாக்கம் செலுத்தும் மாற்று வீரராக சுபம் துபே இணைந்தார்.
பெரெய்ரா – துபே கூட்டணி கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி, அணியின் ரன் வேகத்தை அதிகரித்தது. இறுதியில், ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் பெரெய்ரா 52 ரன்களுடனும், சுபம் துபே 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி இந்த சீசனில் தனது முதல் தோல்வியை சந்தித்தது.
Prasanth Subramani