244 ரன்கள் சேஸ் சாதனை – ஹைதராபாத் அதிரடியில் மும்பை வீழ்ச்சி
ஐபிஎல் 2026 போட்டியில் மும்பை 243 ரன்கள் எடுத்தும், ஹைதராபாத் அணி 249 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2026 தொடரின் 41-ஆவது போட்டியில், ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான வில் ஜாக்ஸ் மற்றும் ரயான் ரிக்கெல்டன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர். வில் ஜாக்ஸ் 46 ரன்களில் அவுட்டானார்.
மறுபுறம் ரிக்கெல்டன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 55 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹார்திக் பாண்டியா 31 ரன்கள், நமன் திா் 22 ரன்கள் சேர்த்தனர்.
இதனால் 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தது.
பின்னர் 244 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இணைந்து 129 ரன்கள் கூட்டணி அமைத்து அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர்.
அபிஷேக் சர்மா 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹெட் 76 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றினார். தொடர்ந்து ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி 65 ரன்கள் எடுத்தார்.
இறுதிக்கட்டத்தில் சலில் அரோரா 30 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டி முழுவதும் ரன் மழை பொழிந்த பரபரப்பான ஆட்டமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
Prasanth Subramani