ஹோர்முஸ் நீரிணை திறக்க அமெரிக்கா நடவடிக்கை – வளைகுடாவில் பதற்றம் அதிகரிப்பு

ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா “புராஜெக்ட் ஃப்ரீடம்” நடவடிக்கையை தொடங்கியது. ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்ததால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை திறக்க அமெரிக்கா நடவடிக்கை – வளைகுடாவில் பதற்றம் அதிகரிப்பு

ஈரானால் முடக்கப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க அமெரிக்கா தீவிர முயற்சிகளை தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் இரண்டு சரக்குக் கப்பல்கள் ராணுவப் பாதுகாப்புடன் அந்த நீரிணையை கடந்து சென்றதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடங்கியதிலிருந்து, இந்த முக்கிய கடல் பாதை ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல்–லெபனான் போர் நிறுத்தத்தையொட்டி நீரிணையை திறப்பதாக ஈரான் அறிவித்திருந்தாலும், அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை தொடர்ந்ததால் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.

அமெரிக்கா தனது கடல்வழி முற்றுகையை விலக்கினால், நீரிணையை திறக்க தயாராக இருப்பதாக ஈரான் சமரசத் திட்டங்களை முன்வைத்தது. ஆனால், அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஈடுபடாததால், அந்த முன்மொழிவுகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

உலகளாவிய அளவில் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து இந்த ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறுவதால், அதன் முடக்கம் எரிபொருள் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது.

இந்த சூழலில், உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று “புராஜெக்ட் ஃப்ரீடம்” என்ற நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இதன் மூலம் பாரசீக வளைகுடா பகுதிகளில் சிக்கியுள்ள கப்பல்களை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேசமயம், ஓமன் கடல் எல்லை வழியாக கப்பல்களை இயக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கடலில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் காரணமாக கப்பல் நிறுவனங்கள் அச்சத்தில் உள்ளன.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான், “ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழையும் வெளிநாட்டு ராணுவக் கப்பல்களை தாக்குவோம்” என எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எண்ணெய் நிலையங்கள் மற்றும் சரக்கு கப்பல்களில் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அமெரிக்க ராணுவம் தனது கப்பல்கள் பாதுகாப்பாக உள்ளன என மறுத்துள்ளது.

தற்போதைய தற்காலிக போர் நிறுத்தம் நீடிக்குமா அல்லது இந்த பிரச்சனை மீண்டும் பெரிய மோதலாக மாறுமா என்ற கேள்வி உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.