இனி பிஎஃப் பணம் எடுக்க செக், பாஸ்புக் தேவையில்லை: ஈபிஎஃப்ஓ புதிய டிஜிட்டல் நடைமுறை
ஈபிஎஃப்ஓவின் புதிய டிஜிட்டல் நடைமுறையால் பிஎஃப் பணம் எடுக்க ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது வங்கி பாஸ்புக் நகல் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
பிஎஃப் சந்தாதாரர்களுக்கு முக்கியமான மாற்றமாக, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது டிஜிட்டல் நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தியுள்ளது. இனி பிஎஃப் பணத்தைப் பெறுவதற்கான கிளைம் செயல்முறையில் ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது வங்கி பாஸ்புக் நகலை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய டிஜிட்டல் நடைமுறையின் மூலம் வங்கி கணக்கு தொடர்பான விவரங்கள் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டிருந்தால், கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்காமல் பிஎஃப் கிளைம் பெறுவதற்கான நடைமுறை எளிதாகியுள்ளது. இதனால் பிஎஃப் சந்தாதாரர்கள் கிளைம் செய்யும்போது எதிர்கொள்ளும் ஆவணச் சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈபிஎஃப்ஓ மேற்கொண்டு வரும் டிஜிட்டல் ஆட்டோமேஷன் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. 2025–26 நிதியாண்டில் மட்டும் டிஜிட்டல் ஆட்டோமேஷன் மூலம் 8.3 கோடி பிஎஃப் கிளைம்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
பிஎஃப் கிளைம் செயல்முறையை விரைவாகவும் எளிமையாகவும் மாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் மாற்றங்களால், சந்தாதாரர்கள் குறைந்த ஆவணங்களுடன் தங்களது பிஎஃப் தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த மாற்றம் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு கூடுதல் வசதியை வழங்குவதுடன், கிளைம் செயல்முறையில் ஆவண சரிபார்ப்பு தொடர்பான சிரமங்களையும் குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.
Prasanth Subramani