குற்றாலத்தில் காற்றாற்று வெள்ளப்பெருக்கு: அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
தொடர்மழையால் குற்றாலத்தில் இரண்டாவது நாளாக காற்றாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் இரண்டாவது நாளாக காற்றாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
வெள்ளிக்கிழமை குற்றாலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், அவ்வப்போது மிதமான சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக ஐந்தருவியில் பிற்பகல் நேரத்தில் காற்றாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், தொடர் மழையின் தாக்கம் காரணமாக சனிக்கிழமையும் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து முக்கிய அருவிகளிலும் மீண்டும் காற்றாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வனத்துறை அதிகாரிகள் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு முழுமையான தடை விதித்துள்ளனர்.
விடுமுறை நாளையொட்டி குடும்பத்தினருடன் மற்றும் நண்பர்களுடன் குற்றாலத்திற்கு அதிகாலையிலேயே வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், தடை காரணமாக அருவிகளில் நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்வரத்து மற்றும் வானிலை நிலவரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்கவும், அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Prasanth Subramani