தமிழகத்தில் தொடரும் கனமழை எச்சரிக்கை – பல மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1.5 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும், வட உள் கர்நாடகம் முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழ்நாடு வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதையும் காணப்படுகிறது.
இதன் காரணமாக, மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மே 8 முதல் 11 வரை தென் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மே 12 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், மே 6 முதல் 10 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Prasanth Subramani