அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுத்து பயணித்த முதல்வர் விஜய்.. பயணிகளுடன் கலந்துரையாடி ஆச்சரியம்!
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் 300 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த முதல்வர் ஜோசப் விஜய், பின்னர் 29ஏ அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுத்து பயணம் செய்து ஓட்டுநர், நடத்துனருடன் கலந்துரையாடினார்.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் புதிய பேருந்து சேவைகளை தொடங்கி வைத்த பிறகு, அரசுப் பேருந்தில் சாதாரண பயணியாக டிக்கெட் எடுத்து பயணித்த முதல்வர் ஜோசப் விஜயின் செயல் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 6 மண்டலங்களுக்காக 300 புதிய அரசுப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த புதிய பேருந்து சேவைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜோசப் விஜய் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சி முடிந்ததும், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து பெரம்பூர் நோக்கிச் செல்லும் 29ஏ அரசுப் பேருந்தில் முதல்வர் விஜய் ஏறி பயணம் மேற்கொண்டார். பேருந்தில் ஏறிய அவர் முதலில் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவர்களின் பணிகளைப் பாராட்டினார்.
பின்னர், மற்ற பயணிகளைப் போலவே நடத்துனரிடம் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய முதல்வர், பேருந்தின் முன்புற இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். இந்த நிகழ்வு பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பயணத்தின் போது நடத்துனரை தனது அருகில் அமரச் சொல்லி, அவர்களின் பணிச்சூழல், தினசரி எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பயணிகள் சேவை குறித்தும் கேட்டறிந்தார். பொதுப் போக்குவரத்து ஊழியர்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்துகொள்ளும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
அதன்பின், ஓட்டுநரின் அருகில் உள்ள இருக்கைக்குச் சென்ற முதல்வர் விஜய், தனது செல்போனில் பயண அனுபவத்தை பதிவு செய்தார். சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்களையும், பேருந்து பயண காட்சிகளையும் தானே வீடியோவாக பதிவு செய்தார்.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை 29ஏ பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய், பின்னர் அதே பேருந்தில் மீண்டும் தலைமைச் செயலகத்திற்குத் திரும்பினார்.
புதிய பேருந்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலேயே பொதுப் போக்குவரத்தை நேரடியாக அனுபவிக்கும் வகையில் முதல்வர் மேற்கொண்ட இந்த பயணம், போக்குவரத்துத் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசுப் பேருந்து சேவைகளின் தரம், பயணிகளின் வசதிகள் மற்றும் ஊழியர்களின் பணிநிலையை நேரில் அறிந்து கொள்ளும் முயற்சியாகவும் இந்த பயணம் பார்க்கப்படுகிறது.
Prasanth Subramani