ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை.. 100°F-ஐ தாண்டிய வெப்பத்தால் மக்கள் அவதி!
ஐரோப்பாவின் பல நாடுகளில் கடும் வெப்ப அலை தாக்கம் அதிகரித்துள்ளது. பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் 100°F-ஐ தாண்டிய வெப்பநிலை பதிவாகி, வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.
ஐரோப்பாவின் பல பகுதிகளில் கடும் வெப்ப அலை தாக்கம் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். கோடை காலத்தின் உச்சத்தில் பல நாடுகளில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக பதிவாகி வருவதால், அதிகாரிகள் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை (சுமார் 38 டிகிரி செல்சியஸுக்கு மேல்) தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் வெளிப்புற பணிகளில் ஈடுபடுவோர் மற்றும் முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
அதிக வெப்பம் காரணமாக தோல் தொடர்பான நோய்கள், நீரிழப்பு, வெப்பச் சோர்வு மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல நகரங்களில் பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற பயணங்களைத் தவிர்க்கவும், அதிகளவில் தண்ணீர் அருந்தவும், நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
காலநிலை மாற்றத்தின் தாக்கமாக உலகின் பல பகுதிகளில் வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், ஐரோப்பாவும் அதிலிருந்து தப்பிக்க முடியாத சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோடை காலங்களில் அதிக வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில், இந்த ஆண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெப்ப அலை தொடரும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகள் வலியுறுத்தியுள்ளன. ஐரோப்பா முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அடுத்த சில நாட்களும் நீடிக்கக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Prasanth Subramani