ஆட்சியமைக்க உரிமை கோரி தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்குச் சென்ற விஜய், ஆளுநரை சந்திக்காமல் பாதியிலேயே வீடு திரும்பிய சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர் அவர்களை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் புறப்பட்டுச் சென்றிருந்தார். ஆனால், அவருக்கு அதிகாரப்பூர்வ சந்திப்பு நேரம் வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விஜய்யும் முன்கூட்டியே நேரம் கேட்காமல் ஆளுநரை சந்திக்க புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், ஆளுநரை சந்திக்காமல் அவர் பாதியிலேயே திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, விஜய், ஆளுநர் ரஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர் அவர்களை மூன்று முறை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தார்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், முழு பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை பெறாததால், கூட்டணி ஆதரவைப் பெறும் முயற்சியில் தவெக தீவிரமாக ஈடுபட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்தன.
அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி கட்சியும் இன்று தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தவெகவுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.
ஐயுஎம்எல் சார்பில் இரண்டு எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்ட ஆதரவு கடிதம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தவெகவின் மொத்த ஆதரவு பலம் தற்போது 120 ஆக உயர்ந்துள்ளது.
முழு பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தவெகவுக்கு கிடைத்துள்ளதால், விஜய் ஆட்சியமைப்பதில் இருந்த முக்கிய சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.