IPL 2027 மினி ஏலம்: 1,220 வீரர்கள் பதிவு! ₹2 கோடி அடிப்படை விலையில் 30 நட்சத்திர வீரர்கள் – ஏலம் டிசம்பர் 16-ல்
ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்காக 1,220 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 939 இந்திய வீரர்கள், 281 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். டிசம்பர் 16ஆம் தேதி கோவாவில் ஏலம் நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2027 தொடருக்கான மினி ஏலத்தில் பங்கேற்பதற்காக மொத்தம் 1,220 வீரர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இந்தப் பட்டியலில் 939 இந்திய வீரர்களும், 281 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் மொத்தம் 30 வீரர்கள் தங்களது அடிப்படை விலையாக ரூ.2 கோடியை நிர்ணயித்துள்ளனர். முன்னணி சர்வதேச வீரர்கள் பலர் ஏலத்தில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளதால், ஐபிஎல் 2027 மினி ஏலம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.2 கோடி அடிப்படை விலை நிர்ணயித்துள்ள வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் பென் ஸ்டோக்ஸ், டேவிட் வார்னர், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஜானி பேர்ஸ்டோ, டாம் கரன், டேரில் மிட்செல், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டிரென்ட் போல்ட், அன்ரிச் நோர்ட்ஜே, ஜெரால்ட் கோட்ஸி, மதீஷா பதிரானா, வனிந்து ஹசரங்கா, ஷாய் ஹோப், ஷிம்ரான் ஹெட்மையர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய வீரர்களில் அவேஷ் கான், தீபக் சாஹர் ஆகியோர் ரூ.2 கோடி அடிப்படை விலையில் பதிவு செய்துள்ளனர். மேலும் ஆகாஷ் தீப், ஜெய்தேவ் உனத்கட், துஷார் தேஷ்பாண்டே, உமேஷ் யாதவ், உம்ரான் மாலிக், மயங்க் அகர்வால், கருண் நாயர், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, சிவம் மாவி உள்ளிட்ட இந்திய வீரர்களும் ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மொத்தம் பதிவு செய்துள்ள 1,220 வீரர்களில் இருந்து இறுதியாக ஏலத்தில் பங்கேற்கத் தேர்வு செய்யப்படும் வீரர்களின் பட்டியல் டிசம்பர் 4ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து ஐபிஎல் 2027 மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை அணிகள் தேர்வு செய்யப் போகின்றன, முன்னணி வீரர்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
Prasanth Subramani