ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய் – ஆளுநரை சந்தித்த தவெக தலைவர்
தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து உரிமை கோரினார். பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்.
தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரி, தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தார்.
சென்னையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் அதிகாரப்பூர்வ கடிதம் வழங்கியுள்ளது.
இதற்கிடையில், விஜய் நாளை (மே 7) தமிழக முதலமைச்சராக பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாகவும், பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய்யை சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கினர்.
தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரின் ஆதரவு கடிதமும் விஜய்யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநர் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்ததும், விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்பார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Prasanth Subramani