ஹோர்முஸ் நீரிணை பெயர்மாற்ற சர்ச்சை – “டிரம்ப் நீரிணை” வரைபடம் வெளியீடு
ஹோர்முஸ் நீரிணையை “டிரம்ப் நீரிணை” என பெயர்மாற்றம் செய்து வரைபடம் வெளியிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை தனது பெயரின்படி “டிரம்ப் நீரிணை” என மாற்றி புதிய வரைபடம் ஒன்றை அமெரிக்க அதிபர் Donald Trump வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதன் பின்னணியில், சர்வதேச எரிபொருள் விநியோகத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது.
இதனால் உலகளாவிய அளவில் எரிசக்தி விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
இந்த சூழலில், ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 29 அன்று சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ஹோர்முஸ் நீரிணையை “டிரம்ப் நீரிணை” எனக் குறிப்பிடும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வரைபடத்தை டிரம்ப் பகிர்ந்துள்ளார்.
முன்னதாகவே செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதே பெயரை பயன்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கை உலக அரசியல் வட்டாரங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விவகாரங்களில் தனது தாக்கத்தை வெளிப்படுத்தவும், தனிப்பட்ட புகழை உயர்த்தவும் டிரம்ப் இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு படங்களை வெளியிடுவது வழக்கமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Prasanth Subramani